உதகை, பிப். 10: உதகை, காந்தல் பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்காக நிரந்தர கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கித் தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காந்தல் பகுதி பால் உற்பத்தியாளர்களின் சார்பில் உதகை நகர்மன்றத் தலைவருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
உதகை, காந்தல் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் மாடு வளர்த்து மாவட்ட ஆவின் நிர்வாகத்துக்கு, காந்தல் பகுதியில் உள்ள கூட்டுறவு பால் சங்கத்தின் மூலம் பால் வழங்கி வருகிறோம். தற்போது பால் கொள்முதல் செய்யும் இடம் தனியாருக்கு சொந்தமானதாகும்.
இப்பகுதியில் தினந்தோறும் பால் விற்பனையும் நடைபெற்று வருவதால், இச்சிறிய இடம் போதுமானதாகவும் இல்லை. மேலும் இப்பகுதியில் கூட்டுறவு நியாயவிலைக் கடையும் உள்ளதால், அங்கு வரும் பொதுமக்களுக்கும், இப்பகுதி வழியாக செல்வோருக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பால் உற்பத்தியாளர்களுக்காக நிரந்தர இடம் ஒதுக்கி, சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.