கோவை, பிப். 10: கடந்த ஆட்சியில் மின்சார வாரியத்தில் ரூ.53 ஆயிரம் கோடி கடன் வைத்து மின் பற்றாக்குறையை ஏற்படுத்திய காரணத்தால் தான் தற்போது மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும் என மேயர் செ.ம.வேலுசாமி பேசினார்.
கோவை மாநகராட்சி 71வது மற்றும் 73வது வார்டுகளுக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த 508 குடும்பங்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:
இல்லத்தரசிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கி வருகிறார். பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் மின்சார வாரியத்தில் ரூ.53 ஆயிரம் கோடி கடன் வைத்து, மின் பற்றாக்குறையை ஏற்படுத்திய காரணத்தால் தான் தற்போது மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும்.
பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் இந்தாண்டில் 9 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. மிக விரைவில் இவ்வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றார்.
ஆட்சியர் மு.கருணாகரன் பேசியது:
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பெண்களின் திருமணத்துக்கு உதவித் தொகையுடன் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு கல்வி ஊக்கத் தொகையாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு முறையே ரூ.1,500, ரூ.2,000 வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் மனோகர்சிங், மண்டல குழுத் தலைவர் ஆதிநாராயணன், மாநகராட்சி 71வது வார்டு கவுன்சிலர் லலிதாமணி, 73வது வார்டு கவுன்சிலர் லீலாவதி, கோவை வடக்கு வட்டாட்சியர் வீரபத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சீரான மின் விநியோகம் கோரி காரமடையில் மறியல்
மேட்டுப்பாளையம், பிப். 10: சீரான மின் விநியோகத்தை வலியுறுத்தியும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியை துவக்க கோரியும் காரமடையில் திடீர் சாலை மறியல் நடைபெற்றது.
காரமடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட பவுண்டரிகளும், ஏராளமான தொழில் நிறுவனங்களும் உள்ளன. கடந்த சில நாட்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டால் இத்தொழில் நிறுவனங்களில் பணிகள் முடங்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். மேலும், தேர்வு காலத்தில் இரவும், பகலும் தொடர் மின்வெட்டு இருப்பதால் மாணவ, மாணவியர் பாடங்களை கற்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்கச் செய்து மின்வெட்டை சீர்செய்ய வலியுறுத்தி, காரமடை பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை தோலம்பாளையம் பிரிவு, 5 முனை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை, மேட்டுப்பாளையம், புஜங்கனூர் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் சரக போலீஸ் டி.எஸ்.பி சக்திவேல், காரமடை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கொண்டசாமி வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இறுதியில் மின்வெட்டை சரிசெய்யும் பிரச்னையில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், நிலைமை விரைவில் சீரடையுமென மின்வாரிய அதிகாரி உறுதி கூறியதை தொடர்ந்து, சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.