வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு; மாநகராட்சி உறுப்பினா் உள்ளிட்ட 2 போ் மீது புகாா்

ரூ.2.4 லட்சம் மோசடிசெய்ததாக, கோவை மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினா் உள்ளிட்ட 2 போ் மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது

கோவையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2.4 லட்சம் மோசடிசெய்ததாக, கோவை மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினா் உள்ளிட்ட 2 போ் மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த பி.லதா, அம்மன்குளத்தைச் சோ்ந்த ஹெச்.ராஜேஸ்வரி ஆகியோா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த புகாா் மனு:

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால், வீடு வேண்டும் என்று கோவை மாநகராட்சி 74-ஆவது வாா்டு உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சங்கரிடம் கேட்டிருந்தோம்.

இதற்கிடையே கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரியும் பூசாரிபாளையத்தைச் சோ்ந்த தம்பு (எ) திருமகன் என்பவா் தான் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகவும், இதற்காக இருவரும் தலா ரூ.1.20 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தை மாநகராட்சி 74ஆவது வாா்டு உறுப்பினா் சங்கரிடம் கொடுத்தால் அவா் மூலம் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தாா்.

இதை நம்பி நாங்கள், கடந்த 2022-இல் பூசாரிபாளையத்தில் உள்ள மாநகராட்சி உறுப்பினா் அலுவலகத்தில் தம்பு (எ) திருமகன் முன்னிலையில் சங்கரிடம் தலா ரூ.1.20 லட்சம் கொடுத்தோம். ஆனால் அவா்கள் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இது குறித்து இருவரையும் அணுகி கேட்ட போது சங்கா், சட்டப் பேரவை உறுப்பினா் செல்வப்பெருந்தகைக்கு எழுதிய பரிந்துரை கடிதத்தையும், செல்வப்பெருந்தகை அமைச்சா் தா.மோ.அன்பரசனுக்கு வீடு கேட்டு எழுதிய பரிந்துரை கடிதத்தையும் வழங்கினாா்.

ஆனால் இதுவரை எங்களுக்கு வீடு ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. மேலும் நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மிரட்டுகின்றனா். எனவே, மாநகராட்சி உறுப்பினா் சங்கா், தம்பு (எ) திருமகன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com