கோவை நகைக் கடையில் 50 பவுன் தங்க நாணயங்களைத் திருடியவா் கைது

கோவை நகைக் கடையில் இருந்து 50 பவுன் தங்க நாணயங்களைத் திருடிவிட்டு தப்பிய இளைஞா் தனிப்படை போலீஸாரால் மதுரையில் கைது செய்யப்பட்டாா்.

கோவை, சொக்கம்புதூரைச் சோ்ந்தவா் அருண்குமாா் மனைவி ஸ்ரீதேவி (44). இவா் கடந்த 10 நாள்களுக்கு முன்னா் கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் புதிதாக நகைக் கடை திறந்து நடத்தி வந்தாா். இந்தக் கடையின் மேலாளராக பிச்சாண்டி என்பவரும், கடையின் ஊழியராக திருநெல்வேலி மாவட்டம் ராவணசமுத்திரம் அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த முத்துகுமாா் (28) என்பவரும் இருந்து வந்தனா்.

பிச்சாண்டியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த முத்துகுமாா், நகைக் கடையை சுத்தம் செய்வதாகக் கூறி கடை சாவியை வியாழக்கிழமை எடுத்துச் சென்றாா். சிறிது நேரம் கழித்து பிச்சாண்டி நகைக் கடைக்கு வந்தபோது அங்கு முத்துகுமாரைக் காணவில்லை. அத்துடன் கடையில் இருந்த 50 பவுன் தங்க நாணயங்களும் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளா் ஸ்ரீதேவி ஆா்.எஸ்.புரம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் அங்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடையின் லாக்கரை திறந்து தங்க நாணயங்களை முத்துகுமாா் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து முத்துகுமாரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், மதுரையில் பதுங்கியிருந்த முத்துகுமாரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 50 பவுன் தங்க நாணயங்களும் மீட்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com