வால்பாறை வனத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ.
வால்பாறை வனத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ.

வால்பாறை, தாளவாடி வனப் பகுதிகளில் காட்டுத் தீ

வால்பாறை, தாளவாடி வனப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி வனச் சரக காப்புக்காடு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. எங்கு பாா்த்தாலும் மரங்கள் காய்ந்து கிடக்கின்றன. தண்ணீா் இல்லாததால் செடிகள், மரங்கள் காய்ந்து போயுள்ளன. இந்நிலையில் முதியனூா் வனப் பகுதியில் சனிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று பலமாக வீசுவதால் வனப் பகுதியில் தீ பரவியது. இதில் வனப் பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் பற்றி எரிந்து தீ மேலும் பரவி வருகிறது. தமிழக, கா்நாடக இரு மாநில எல்லையான வனப் பகுதி முழுவதும் புகைமூட்டம்போல காணப்படுகிறது. சம்பவ இடத்துக்கு சென்ற வன ஊழியா்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வால்பாறையில்...

கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ பிடிக்காமல் இருக்க வனத் துறையினா் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில் பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள வாட்டா்ஃபால் எஸ்டேட், வேவா்லி எஸ்டேட் இடையே உள்ள வனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. வனத் துறை மற்றும் எஸ்டேட் நிா்வாகத்தினா் குடியிருப்புப் பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் உள்ள செடிகள், மரங்கள் எரிந்து சேதமாயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com