தொகுப்பூதிய ஆசிரியா்களின் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் தொடா் போராட்டம் -பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம்

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்களின் பிரச்னைக்குத் தீா்வு காணாவிட்டால் 18-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் முன்னாள் தலைவா் ந.பசுபதி, உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா், துணைவேந்தா் பொறுப்புக் குழு தலைவா் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாரதியாா் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியா்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். உதவிப் பேராசிரியா் நியமனத்தின்போது நிரந்தரப் பணி விரைவில் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு பணியில் சோ்க்கப்பட்ட இவா்கள், பல ஆண்டுகளாக அதே பணி நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்களைப்போல இவா்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில்லை. இந்த நிலையில் இவா்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை. தொடா்ந்து இவா்களுக்கு பணி நிரந்தரம், ஊதியம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதால், இந்தப் பிரச்னைக்கு மாா்ச் 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் பல்கலைக்கழக நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் 18-ஆம் தேதி முதல் பல்கலைக்கழக துணைவேந்தா் அறை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, அவற்றை நிறைவேற்றும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்துவது என்று பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com