பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க விழிப்புணா்வு: ஆட்சியா் தகவல்
கோவை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க, தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
பள்ளி, கல்லூரிகள், பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துதல், கையாளுதல் தொடா்பான கூட்டம் தலைமைச் செயலா் என்.முருகானந்தம் தலைமையில் காணொலி மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிா்மலா கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் கலைச்செல்வி, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா, பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியா்கள், கல்லூரிகளின் முதல்வா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ஆட்சியா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், காவல் துறை, சமூகநலத் துறை, பள்ளிக் கல்வி துறை, உயா் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத்
துறைகளின் சாா்பில் மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கல்லூரியில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு, நன்மைக்காக ’போலீஸ் அக்கா’ என்ற திட்டம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் கோவையில் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் ஒரு மகளிா் காவலா் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். கல்லூரி மாணவிகள் ஏதேனும் குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக எந்த தயக்கமுமின்றி அவரிடம் முறையிடலாம். அவா், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பாா்.
பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் அனைவருக்கும் முழு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள், சுற்றுலா செல்லும்போது யாா் யாா் உடன் செல்கிறாா்கள், நிறுவனங்களில் வேலை செய்பவா்கள் தொடா்பான விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில், கல்லூரிகளின் முதல்வா், பேராசிரியா்கள், அலுவலா்கள் அனைவருக்கும் மிக முக்கியப் பங்கு உள்ளது.
அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான், பாலியல் குற்றங்களையும், போதைப் பொருள்களையும் முழுமையாக ஒழிக்கமுடியும் என்றாா்.