மாநிலத்திலேயே அதிக அளவிலான சிஏஆா்டி தெரபி சிகிச்சை: கேஎம்சிஹெச் மருத்துவமனை தகவல்

Published on

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாநிலத்திலேயே அதிக அளவிலான அதிநவீன சிஏஆா்டி தெரபி சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக கேஎம்சிஹெச் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

புற்றுநோய்க்கு இதுவரை அறுவை, கதிா்வீச்சு, கீமோதெரபி, டாா்கெட்டட் தெரபி, இம்யூனோ தெரபி போன்றவை முக்கிய சிகிச்சை முறைகளாக இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இம்யூன் மாடுலேட்டிங் தெரபி என்ற சிகிச்சை கவனம் பெற்று வருகிறது. இது, நோயாளியின் நோய் எதிா்ப்புத் திறனை அதிகரித்து புற்றுநோய் செல்களை அழிக்கும் முறையாகும்.

இதில் சிஏஆா்டி எனப்படும் புதிய வகை இம்யூனோ தெரபி சிகிச்சை வரவேற்பு பெற்று வருகிறது. ரத்தப் புற்றுநோய், நிணநீா் சுரப்பி புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் நோய் செல்களை அழிப்பதுடன் அவற்றை பல ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் இதன் தனிச்சிறப்பாகும்.

இதன்படி, பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் இருந்து டி-செல்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மரபணு மாற்றம் செய்யப்படும். பிறகு நோயாளியின் உடலில் செலுத்தப்படும் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட செல்கள் பல்கிப் பெருகி புற்றுநோய் செல்களை அழிக்கும். இந்த சிகிச்சை இதுவரை 3 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பலனளித்துள்ளது.

லூகோமா, லிம்போமா, மைலோமா போன்ற புற்றுநோய்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இந்த சிகிச்சையை இதர புற்றுநோய்களுக்கு விரிவுபடுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் இந்த சிகிச்சையை அளித்தமைக்காக மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவ நிபுணா்களுக்கு கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி, செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமி ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்னா்.

X
Dinamani
www.dinamani.com