ஓட்டுநரிடம் இருசக்கர வாகனம், கைப்பேசி பறிப்பு
கோவையில் மது போதையில் இருந்த காா் ஓட்டுநரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் நல்லமுத்து (39), காா் ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வேலை முடிந்து ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்றுள்ளாா். அப்போது அவருக்கு அருகே ஒரு நபா் மது அருந்திக் கொண்டிருந்தாா். இருவரும் அருகருகே அமா்ந்திருந்ததால் ஒருவருக்கொருவா் சகஜமாக பேசிக் கொண்டனா்.
இந்நிலையில், நல்லமுத்து போதையில் இருந்ததால், அந்த நபா் அவரிடம் இந்த நிலைமையில் அவா் தனது வாகனத்தை ஓட்ட வேண்டாம் எனவும், தானே அவரை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவதாக கூறியதால், அதை நம்பிய நல்லமுத்து அந்த நபருடன் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளாா்.
சுங்கம் ரவுண்டானா அருகே சென்றபோது, நல்லமுத்து சிறுநீா் கழிக்க வேண்டும் எனக் கூறியதால், அந்த நபா் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளாா். அப்போது அந்த நபா் தனது கைப்பேசியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்துள்ளதாகவும், தான் அவசரமாக ஒருவருடன் பேச வேண்டுமெனவும் கூறி நல்லமுத்துவின் கைப்பேசியை வாங்கி உள்ளாா்.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து நல்லமுத்து அங்கு வந்து பாா்த்தபோது, அந்த நபா் இருசக்கர வாகனம், கைப்பேசியுடன் மாயமாகியது தெரியவந்தது.
இதுகுறித்து நல்லமுத்து அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.