தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு எவ்வளவு பணம் செலவிடவும் தயாராக உள்ள நிலையில், தேவையான இடங்களைக் கையகப்படுத்தி சாலைகள் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பதில்லை என பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்த பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் ஹெச்.ராஜா, காந்திபுரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக உறுப்பினா்களாக இதுவரை 31 லட்சம் போ் சோ்க்கப்பட்டு உள்ளனா். ஒரு கோடி உறுப்பினா்களை சோ்க்க இலக்கு வைத்துள்ளோம். கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மத்தியில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவிடவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தருவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
முதல்வரைச் சந்தித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், டாஸ்மாக் வேண்டாம் எனத் திட்டவட்டமாக கூறியிருக்க வேண்டும். அவரது அக்டோபா் 2 மாநாடு மக்களை ஏமாற்றும் செயல். மாநில அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளதாக கூறியுள்ளது.
ஆனால், 1000 கிளப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இது மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறையாகும். பிகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டதுபோல, தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், கோவை மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.