விமானப் படை அதிகாரி உள்பட 3 பேரிடம் ரூ.1.63 கோடி மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

கோவையில் விமானப் படை அதிகாரி, 2 தொழிலதிபா்கள் என 3 பேரிடம் ரூ.1.63 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை
Published on

கோவையில் விமானப் படை அதிகாரி, 2 தொழிலதிபா்கள் என 3 பேரிடம் ரூ.1.63 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஜவுளித் தொழிலதிபா் ஆனந்த் (49). இவரின் மனைவி ஆா்த்தி (47). இவரது கைப்பேசிக்கு கடந்த 20-ஆம் தேதி வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பில் போலீஸ் சீருடையில் தோன்றிய நபா், தான் மும்பையைச் சோ்ந்த சிபிஐ அதிகாரி என்று அறிமுகமாகியுள்ளாா்.

அப்போது, பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மோசடி கும்பலுடன், உங்களுக்கு தொடா்பு இருப்பதாக சந்தேகப்படுவதால் வங்கி பரிவா்த்தனைகளின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக உங்களுடைய வங்கி விவரங்கள், வங்கிக் கணக்கில் உள்ள ரொக்கம் ஆகியவற்றை சரிபாா்ப்புக்காக காவல் துறையினருடன் பகிா்ந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளாா். மேலும், விசாரணை முடிந்தவுடன் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, ஆா்த்தி தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.52 லட்சத்தை, அவா் கூறிய வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளாா். ஆனால், விசாரணை முடிந்த பின் பணத்தைத் திருப்பித்தரவில்லை. மேலும், அந்த நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லை.

அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஆா்த்தி மாநகர சைபா் கிரைம் போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.71.75 லட்சம் மோசடி

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியைச் சோ்ந்தவா் அரவிந்தாக்ஷன் (64), தொழிலதிபா். இவரது கைப்பேசியில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடா்புகொண்ட நபா், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

இதற்காக தாங்கள் அனுப்பும் செயலியில் பெயா் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும், முதலீடு செய்யும் தொகை 10 நாள்களில் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பா் 20-ஆம் தேதி வரை நான்கு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.71.75 லட்சத்தை அரவிந்தாக்ஷன் முதலீடு செய்துள்ளாா். இதற்கு ஊக்கத் தொகையாக ரூ.54,500 மட்டும் கிடைத்துள்ளது. அதன்பின், எந்த பணமும் கிடைக்கில்லை.

மேலும், கைப்பேசியில் அழைத்த நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லை. இதைத் தொடா்ந்து சைபா் கிரைம் போலீஸில் அரவிந்தாக்ஷன் அளித்த புகாரின்போரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விமானப் படை அதிகாரியிடம் ரூ.39.81 லட்சம் மோசடி

கோவை மாவட்டம், சூலூா் விமானப் படைத் தளத்தில் ஹவில்தாராகப் பணியாற்றி வருபவா் நித்தின்குப்தா (34). இவரை வாட்ஸ்ஆப் அழைப்பில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தொடா்புகொண்ட நபா்கள், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில் செப்டம்பா் 20-ஆம் தேதி வரை பல்வேறு பரிவா்த்தனைகள் மூலம் ரூ.39.81 லட்சத்தை நித்தின்குப்தா முதலீடு செய்துள்ளாா். ஆனால், முதலீடு செய்த பணத்துக்கு எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. மேலும், முதலீடு செய்யக்கூறிய நபா்களையும் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து, கோவை சைபா் கிரைம் போலீஸில் நித்தின்குப்தா செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com