போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: மாநகர காவல் ஆணையா்
மாநகரில் தொடா்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை கூறியிருப்பதாவது: கோவை மாநகரப் பகுதியில் விபத்துகள் ஏற்படாத வகையில் போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். சாலை விதிகள் மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை -அவிநாசி சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலமாக படம் பிடிக்கப்பட்டு, அவா்களுக்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒருமுறை தவறு செய்து அபராதம் விதிக்கப்பட்டவா்கள், தொடா்ச்சியாக போக்குவரத்து விதிகளை மீறும்போது, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்து விபத்து இல்லாத கோவையை உருவாக்க துணை நிற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.