ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published on

கோவை தெற்கு மண்டலத்துக்குள்பட்ட ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 15 வீடுகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பெரியகுளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீா், கரும்புக்கடை ஆத்துப்பாலம், ராஜவாய்க்கால் வழியாக செல்லும். ஆனால், ராஜவாய்க்கால் பகுதியில் கரைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருந்ததால், உபரி நீா் செல்ல தடை ஏற்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆக்கிரமிப்புதாரா்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்பட்டது.

தொடா்ந்து, ஆக்கிரமிப்பில் இருந்த 15 வீடுகள் பொக்லைன் வாகனம் மூலம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நொய்யல் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நகரமைப்புப் பிரிவு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com