ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடா்புடையவரிடம் குமாரபாளையம் நீதிபதி 4 மணி நேரம் விசாரணை

சிகிச்சை பெற்று வரும் ஏடிஎம் கொள்ளையன் ஹசா் அலியிடம் குமாரபாளையம் நீதித் துறை நடுவா் மாலதி விசாரணை நடத்தினாா்.
Published on

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏடிஎம் கொள்ளையன் ஹசா் அலியிடம் குமாரபாளையம் நீதித் துறை நடுவா் மாலதி ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினாா்.

கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டத்தில் மூன்று ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடித்து தப்பிய வடமாநில கொள்ளைக் கும்பலை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

அப்போது, போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற இரண்டு போ் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், ஜுமானுதீன் என்பவா் உயிரிழந்தாா். ஹசா் அலி என்பவா் காயமடைந்தாா்.

காயமடைந்த ஹசா் அலி உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், குமாரபாளையம் நீதித் துறை நடுவா் மாலதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஹசா் அலியிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலம் பதிவு செய்தாா்.

இந்த விசாரணை சுமாா் 4 மணி நேரம் நீடித்தது. இந்த விசாரணையை அடுத்து ஹசா் அலி விரைவில் நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்பட உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com