போத்தனூா் வழித்தடத்தில் கொச்சுவேலி - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்
கேரள மாநிலம் கொச்சுவேலி - கா்நாடக மாநிலம் பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் கொச்சுவேலி - கா்நாடக மாநிலம் பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. செப்டம்பா் வரை அறிவிக்கப்பட்டிருந்த இந்த சிறப்பு ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, அக்டோபா் 1 முதல் நவம்பா் 5-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி - பெங்களூரு வாராந்திர ரயில் (எண்: 06083) மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில், அக்டோபா் 2 முதல் நவம்பா் 6-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் பெங்களூரில் இருந்து நண்பகல் 12.45 மணிக்கு புறப்படும் பெங்களூரு - கொச்சுவேலி வாராந்திர ரயில் (எண்: 06084) மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.