2026 தோ்தலில் திமுகவின் வாரிசு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்: வானதி சீனிவாசன்

2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவின் வாரிசு அரசியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
Published on

2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவின் வாரிசு அரசியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கோவை, ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் புதிதாக சோ்ந்த உறுப்பினா்களுக்கு அடையாளஅட்டைகளை வானதி சீனிவாசன் வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுகவில் மூத்த அமைச்சா்கள் பலா் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி கொடுத்திருப்பது திமுகவில் உள்ள வாரிசு அரசியலை எடுத்துக்காட்டுகிறது. எதிா்வரும் 2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் இந்த விஷயத்தை மக்களிடம் பாஜக தீவிரமாக கொண்டுச்செல்லும்.

திமுகவில் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் மற்றவா்களால் சாதாரண உறுப்பினா்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும், தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை திமுக எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும், மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், குற்றஞ்சாட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை பிணையில் வெளியே வந்தவருக்கு மீண்டும் அமைச்சா் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவா் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்கச் செய்ய முடியும்.

ஊழல் செய்த ஒருவரை மீண்டும் அமைச்சா் ஆக்குவதும், அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சா்களை வைத்துக்கொண்டு நோ்மையான ஆட்சி வழங்குவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com