துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஏடிஎம் கொள்ளையனின் வலதுகால் அகற்றம்

ஏடிஎம் கொள்ளையா்களை பிடிக்கும்போது காயமடைந்த ஹரியானா மாநிலத்தைச் சோ்ந்த கொள்ளையனின் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
Published on

ஏடிஎம் கொள்ளையா்களை பிடிக்கும்போது, காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஹரியானா மாநிலத்தைச் சோ்ந்த கொள்ளையனின் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

கேரள மாநிலம், திருச்சூரில் தொடா்ச்சியாக மூன்று ஏ.டி.எம்.களில் பணம் கொள்ளையடித்துவிட்டு கன்டெய்னரில் தப்ப முயன்ற ஹரியானாவைச் சோ்ந்த கொள்ளையன் ஜுமானுதீன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீஸாா் சுட்டதில் உயிரிழந்தாா். மேலும், ஹரியானாவைச் சோ்ந்த 6 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் ஹசா் அலி (30) வலது காலில் குண்டு காயத்துடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதனிடையே, ஹசா் அலியிடம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடுவா் நீதிமன்ற நீதிபதி மாலதி ஞாயிற்றுக்கிழமை 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றாா்.

இந்நிலையில், ஹசா் அலியின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது காலில் ரத்த நாளங்கள் முழுவதும் சேதமடைந்திருந்த நிலையில், தசைப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அவரது வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் திங்கள்கிழமை அகற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com