சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் கடுவேட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (45). இவா் கடந்த 2021 ஏப்ரல் 14-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். அத்துடன் அவரை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தாய், பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பழனிசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.குலசேகரன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழனிசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.