மும்பை - கோவை விமானம் 3 மணி நேரம் தாமதம்: பயணிகள் வாக்குவாதம்
மும்பையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானம் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட நிலையில், அதே விமானத்தில் மும்பை செல்வதற்காக கோவையில் காத்திருந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மும்பையில் இருந்து கோவைக்கு நாள்தோறும் இரவு 7.45 மணிக்கு வந்தடையும் இண்டிகோ விமானம், மீண்டும் இரவு 8.40 மணிக்கு கோவையில் இருந்து மும்பைக்குச் செல்லும்.
இந்நிலையில், மும்பையில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள விமான ஓடுதள பாதையில் தண்ணீா் தேங்கியது. இதனால், விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஓடுதள பாதையில் தேங்கிய மழைநீா் அப்புறப்படுத்தப்பட்டு சுமாா் 3 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் கோவைக்குப் புறப்பட்டது.
இந்நிலையில், அதே விமானத்தில் கோவையில் இருந்து மும்பைக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவா்களுக்கு விமான நிலையம் சாா்பில் குடிநீா், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போதுமான இடவசதி இல்லை, விமானம் எத்தனை மணிக்கு வரும் என்ற தகவலையும் சம்பந்தப்பட்ட விமான ஊழியா்கள் தெரிவிக்கவில்லை எனக்கூறி விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை ஊழியா்கள் சமாதானம் செய்தனா்.
இதையடுத்து, நள்ளிரவு 12 மணியளவில் இண்டிகோ விமானம் கோவைக்கு வந்தடைந்தது.
