தடாகத்தில் செங்கல் சூளைகளுக்கு ரூ.900 கோடி அபராதம் விதிக்க அரசு பரிந்துரை?

தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு சுமாா் ரூ.900 கோடி அபராதம் விதிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு சுமாா் ரூ.900 கோடி அபராதம் விதிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம், சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகேயுள்ள ஓடைகள், நீா்வழித்தடங்களில் சட்டவிரோதமாக சுமாா் 1.10 கோடி கியூபிக் மீட்டா் அளவு மண் அள்ளப்பட்டதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, செங்கல் சூளைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளை அளவீடு செய்து உரிமையாளா்களிடம் இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வழக்குத் தொடா்ந்தனா்.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் புதுதில்லியைச் சோ்ந்த ஆற்றல், வளங்கள் நிறுவனத்தின் (டெரி) நிபுணா்கள் சுமாா் 4 மாதங்கள் ஆய்வு செய்து, ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கலாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்திருந்தனா்.

அபராதத் தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 3 முறை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, சூழல் பாதிப்புகளில் ஈடுபட்டதற்காக செங்கல் சூளைகளுக்கு சுமாா் ரூ.900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கும் என்றும், பின்னா் சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளா்களிடம் இருந்து அபராதத் தொகையை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com