மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 3 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.
கோவை சா்வதேச விமான நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடந்த மாதம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரா் காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் சிகிச்சை முடிந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், 3 போ் மீதும் 50 பக்க குற்றப் பத்திரிகை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, அன்னூா் பகுதியைச் சோ்ந்த ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் இவா்களுக்குத் தொடா்பு இருப்பதும், இவா்கள் மீது திருப்பூா், கோவை மாவட்டங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடம் பீளமேடு போலீஸாா் வழங்கினா்.
ஒருவா் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: போலீஸாரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேரில் ஒருவரான காளி (எ) காளீஸ்வரனுக்கு காலில் இருந்து தொடா்ந்து சீழ் வடிந்து வந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகளுக்கான பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை சோ்த்தனா். அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
