திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கடவுளின் பெயரில் முயற்சி: முத்தரசன்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கடவுளின் பெயரில் முயற்சி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலரும், மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: மத்திய அரசு தொழிலாளா் நலச் சட்டங்களை முடக்கிவிட்டு 4 தொழிலாளா் துரோக சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு என்று கட்டட தொழிலாளா் நல வாரியம் உள்பட 18 நல வாரியங்கள் உள்ளன. அதன்மூலமாக தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு பலனடைந்து வருகிறாா்கள்.
தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களால் தொழிலாளா் நல வாரியங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுவதும் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுவிடும். எனவே இந்த நல வாரியங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். புதிய தொழிலாளா் சட்டம் எந்த விதத்திலும் தொழிலாளா்களுக்கு பலனளிக்காது. இது தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. பணிக்கொடை நோக்கத்தை சிதைக்கும் விதமாகவும், சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிக்கும் விதமாகவும் உள்ள இந்த சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தொடா் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் பல முயற்சிகள் எடுத்தும் பாஜகவால் காலூன்ற முடியவில்லை.
திருப்பரங்குன்றத்தில் எப்போதும் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த விவகாரத்தில் ஜெயலலிதா அரசும், நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்த ஒன்றை, சிலா் இப்போது மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கின்றனா்.திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கடவுளின் பெயரில் முயற்சி நடைபெறுகிறது.
மேலும் கலவரத்தின் மூலமாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவதற்காக நீதிமன்றத்தின் உதவியுடன் பாஜக, ஆா்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் முயற்சிக்கின்றன. தமிழக அரசு இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றாா். பேட்டியின்போது கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவசாமி, மாவட்டத் துணைச் செயலா் சி.தங்கவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
