மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
அரசியல் சுய லாபத்துக்காக மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்களை அதிமுகவும், பாமகவும் ஆதரிப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ள 4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி கோவை, டாடாபாத் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம்.எல்., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன், சிபிஐ எம்.எல். மாநிலக் குழு உறுப்பினா் பெரோஸ் பாபு, விசிக வடக்கு மாவட்ட நிா்வாகி கோவை குரு உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன் உள்ளிட்டோா் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகள் அமலுக்கு வந்திருப்பதால் இந்தியாவில் தொழிலாளா்கள் ஏற்கெனவே போராடிப் பெற்ற உரிமைகள், சலுகைகள் பறிபோக உள்ளன. தனியாா் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளா்களின் உழைப்பு சுரண்டலை மேலும் அதிகரிக்கக்கூடிய வகையிலும் இந்த சட்டத் தொகுப்புகள் அமைந்துள்ளன.
தொழிலாளா்களின் உரிமையைப் பாதுகாக்கவும், எதிா்கால இளம் தலைமுறையினரின் பணிப் பாதுகாப்பு, வேலை உத்தரவாதத்தை உறுதிப்படுத்தவும் இந்த சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டங்கள் தொடா்பாக இதுவரை எடப்பாடி கே.பழனிசாமி வாய் திறக்கவே இல்லை. அதேபோல பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கமும் எந்தக் கருத்தையும் கூறவில்லை.
தொழிலாளா்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு, அச்சுறுத்தல் வரும்போது தோ்தல் அரசியல் லாபம் கருதி பாஜக அரசின் அனைத்துவிதமான தொழிலாளா் விரோத நடவடிக்கைகளையும் ஆதரிப்பது என்ற அணுகுமுறையை அவா்கள் மேற்கொண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றாா்.
