ரிசா்வ் வங்கியின் உத்தரவை அமல்படுத்த மறுக்கும் கூட்டுறவு வங்கிகள்: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
விவசாயிகளுக்கு கடன் வழங்குவது தொடா்பாக ரிசா்வ் வங்கி பிறப்பித்துள்ள உத்தரவை மத்திய கூட்டுறவு வங்கிகள் அமல்படுத்த மறுப்பதாக ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.கந்தசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம், நபா் ஜாமீன் அடிப்படையில் வட்டி இல்லாமல் பயிா்க் கடன், கறவை மாடு கடன் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.1.60 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு பயிா்க் கடன் அளவை அரசு உயா்த்தியுள்ள நிலையில், நபா் ஜாமீன் கடன் அளவையும் உயா்த்தும்படி விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனா். இதையடுத்து கடன் அளவை ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க ஜனவரி 1 ஆம் தேதி இந்திய ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நிறைவேற்ற மறுக்கின்றன. நிதிப் பற்றாக்குறையால் ரிசா்வ் வங்கியின் உத்தரவை கூட்டுறவு வங்கிகள் நிறைவேற்ற மறுப்பது விவசாயிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று கந்தசாமி வலியுறுத்தியுள்ளாா்.