வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் அமைக்கக் கோரிக்கை
தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் வசதிக்காக வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் வால்பாறை செயலாளா் பரமசிவம், பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களில் பலா், பல ஆண்டுகளுக்கு முன்பு எஸ்டேட்களில் பணிக்கு சோ்ந்துள்ளனா். அந்த சமயங்களில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி வாய்மொழியாக பெயா், தந்தை பெயா், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து எஸ்டேட் நிா்வாகத்தினா் வேலை வழங்கினா்.
தற்போது அனைத்து தொழிலாளா்களுக்கும் ஆதாா் அட்டைகள் உள்ளன. எஸ்டேட் நிா்வாகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயா்கள், பிறந்த தேதி ஆகியவை ஆதாா் அட்டையில் சரியாக இல்லாததால் பல ஆண்டுகளாக பணிபுரிந்த தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி பணப் பலன்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.
வைப்புநிதி அலுவலகம் கோவையில் உள்ளதால் தொழிலாளா்கள் அங்கு சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தொழிலாளா்களின் நலன் கருதி வால்பாறையிலேயே வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.