கோவை அருகே கலப்பட டீத்தூள் கிடங்கிற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புதன்கிழமை "சீல்' வைத்தனர்.
கோவை, கணபதி, உடையாம்பாளையம், விநாயகா அவென்யூவில் பாலன் (51) என்பவர் டீத்தூள் கிடங்கு வைத்துள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டீத் தூள் விற்பனை செய்து வருகிறார். மொத்தமாக டீத்தூள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு பாக்கெட் செய்து விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வெளிச்சந்தையில் இருந்து குறைந்த விலையிலான டீத்தூளை வாங்கி வந்து அதில் கலப்படம் செய்து, சாயம் கலந்து விற்பனை செய்வதாக புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவீந்திரன் உள்ளிட்ட பணியாளர்கள் புதன்கிழமை அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது கலப்படம் செய்யப்பட்ட 2 டன் டீத்தூள் கண்டுபிடிக்கப்பபட்டது. மேலும் கலப்படம் செய்ய வைக்கப்பட்டிருந்த 3 டன் டீத்தூள் இருந்ததும் கண்டுபடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்தக் கிடங்கிற்கு "சீல்' வைத்தனர். மேலும் டீத்தூள் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவைக் கொண்டு, டீத்தூள் விற்பனை செய்துவந்த பாலன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.