கோவை, அவிநாசி சாலையில் தனியார் மருத்துவமனை செலுத்திய சொத்துவரி ரூ. 50.64 லட்சத்தைத் திரும்ப ஒப்படைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை, காளப்பட்டி பகுதியில் தனியார் கண் மருத்துவமனை உள்ளது. அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இக்கண் மருத்துவமனைக்கு கட்டட உரிமம் காளப்பட்டி பேரூராட்சியால் கடந்த 1993-94இல் வழங்கப்பட்டது. அதன்பின் கடந்த 1996-97ஆம் ஆண்டு வரி விதிக்கப்படவில்லை என்று தணிக்கை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சொத்து வரியில் இருந்து விலக்களிக்க மருத்துவமனை நிர்வாகம் கோரியது. பேரூராட்சி சார்பில் வரிவிலக்களிக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. சொத்துவரி நிலுவையில் 50 சதவீதத்தை பேரூராட்சிக்குச் செலுத்த மருத்துவமனைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சொத்துவரி நிலுவையில் 50 சதவீதமான ரூ. 50.64 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் தவணை முறையில் செலுத்தியது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் அறக்கட்டளை செலுத்திய தொகையைத் திரும்ப வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பேரூராட்சி நிர்வாகம் தொகையை வழங்கவில்லை.
உயர் நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்தில் சொத்துவரிக்குச் செலுத்திய தொகையைத் திரும்ப வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூன் 14-இல் உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் மாநகராட்சிக்குச் சாதகமாக தீர்ப்பு வராது என்பதால், தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கண் மருத்துவமனைக்கு ரூ. 50.64 லட்சத்தைத் திரும்ப வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சியின் இத்தீர்மானத்துக்கு அதிமுக உறுப்பினர் சிங்கை பாலன் எதிர்ப்புத் தெரிவித்தார். அனைத்து மருத்துவமனைகளும் இதைக் காரணம் காட்டி வரிவிலக்குக் கேட்பார்கள் என்று சிங்கை பாலன் தெரிவித்தார்.