பொது இடத்தில் கணவரைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண் ஒருவர் பெற்றோருடன் புதன்கிழமை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் புதன்கிழமை பகல் கூச்சலிட்டபடி இரண்டு பெண்களும் ஒரு ஆணும் சென்றனர். நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மனைவி தனலட்சுமி, அவர்களது மகள் இந்துமதி என்று தெரியவந்தது.
இந்துமதிக்கு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திதாஸýடன் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. சக்திதாஸ் செல்வபுரம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராம்.
செவ்வாய்க்கிழமை ஒரு வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சக்திதாஸ், இந்துமதி உள்ளிட்டோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ஸ்டேட் பாங்க் சாலையில் பேருந்துக்காக நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த செல்வபுரம் போலீஸார் சக்திதாûஸ அதே இடத்தில் தாக்கி இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்ததாக இந்துமதி தெரிவித்துள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த செல்வபுரம் காவல் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான போலீஸார் அவர்களுடன் பேச்சு நடத்தினர். பிறகு அவர்களை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, செல்வபுரத்தைச் சேர்ந்த கதிஜா (38) என்ற பெண் சக்திதாஸ் தன்னைத் தாக்கியதாக அளித்த புகாரில், அவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்ததாகவும், அவர் வரமறுத்ததால் கைது செய்ததாகவும் தெரிவித்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினர்.