தெருவிளக்கு பராமரிப்பை ஏற்கெனவே வழங்கிய தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் இருந்து திமுகவினர் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.
கோவை மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாநகராட்சியின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பேரூராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகளை ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டு காலத்துக்கு பராமரிப்புக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
மொத்தம் 8,146 விளக்குகளைப் பராமரிக்க உத்தரவிடப்பட்டது. பணி ஒப்படைக்கப்பட்ட பின் சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்ததாரர் தெருவிளக்குகளுக்கு இலக்கமிட்டதில் மொத்தம் 10,040 தெருவிளக்குகள் உள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்தது.
இப்போதுள்ள தெருவிளக்குகளின் அடிப்படையில் மாதத்துக்கு பராமரிப்புப் பணிக்காக ரூ. 7.81 லட்சம் வீதம் 21 மாதங்களுக்கு ரூ. 1.64 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக குழுத் தலைவர் நந்தகுமார் தலைமையில் திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர். திமுக மாமன்ற உறுப்பினர்கள் பி.வி.சுப்பிரமணியன், ரகுபதி, ஜோதிபாசு, மோகன் ரங்கநாதன், லட்சுமி இளஞ்செழியன் ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர்.