கோவையில் திங்கள்கிழமை பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: கோவை, சுங்கம் புறவழிச்சாலை, ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்திகேயன் (14). இவர் டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து, குறிச்சி குளத்துக்கு சென்றுள்ளார்.
குளிப்பதற்காக குளத்தில் இறங்கியபோது, கார்த்திகேயன் சேற்றுக்குள் சிக்கி நீரில் மூழ்கினார். அவர் நீரில் மூழ்கியதைப் பார்த்து சக நண்பர்கள் சத்தம் போட்டுள்ளனர். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.