கோவை மாவட்டத்தில் உள்ள இரண்டு பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி என 8 உள்ளாட்சி பதவியிடங்களை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒரு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பாஜக வென்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 39 பதவியிடங்களுக்கு செப்.18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் மாநகராட்சியில் 46.53 சதவீதமும், பேரூராட்சிகளில் 65 சதவீதமும், ஊரக பகுதிகளில் 61 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
கோவை மேயர் பதவி உள்ளிட்ட 39 பதவிகளுக்கான தேர்தலில் 19 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2 பதவியிடங்களுக்கு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதுதவிர காலியாக இருந்த 18 பதவிகளுக்கு மொத்தம் 66 பேர் போட்டியிட்டனர். இதில் அதிகபட்சமாக மாநகராட்சி மேயர் பதவிக்கு 16 பேர் போட்டியிட்டனர். உள்ளாட்சி இடைத்தேர்தலில் 18 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 9 பதவியிடங்கள் கட்சி சார்ந்தவை. மீதமுள்ள 9 பதவிகள் கட்சி சார்பற்றவை. அந்த வகையில் கட்சி சார்ந்த 9 பதவியிடங்களுக்கான தேர்தலில் 8 இடங்களை அதிமுக வென்றது. ஒரு இடத்தில் மட்டும் பாஜக வென்றது.
பேரூராட்சி தலைவர் பதவி: மாவட்டத்தில் உள்ள சூலூர் மற்றும் இருகூர் பேரூராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக வென்றது. இதில் சூலூர் பேரூராட்சியில் அதிமுகவின் தங்கராஜ், இருகூர் பேரூராட்சியில் அதிமுகவின் பத்மசுந்தரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி: பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் சர்க்கார் சாமக்குளம் 3 ஆவது வார்டு,கோட்டூர் 16 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகளை அதிமுக வென்றது. இதில் வேட்டைக்காரன்புதூர் 9 ஆவது வார்டு பதவியை பாஜக வென்றது.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் 12 ஆவது வார்டு, சூலூர் ஊராட்சி ஒன்றியம் 7 மற்றும் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகளை அதிமுக வென்றது.
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவி: ஆனைமலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (தெற்கு) ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட சிற்றூராட்சிகளில் காலியாக உள்ள 9 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.