கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில், அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் 2.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குகள் எண்ணும் பணி திங்கள்கிழமை துவங்கியது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. அதன் பின் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகியிருந்த வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது.
முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் 20,543 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார் 7,751 வாக்குகளும், சிபிஎம் வேட்பாளர் சி.பத்மநாபன் 1,619 வாக்குகளும் பெற்றனர். முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் 12,792 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். அதன் பின், ஒவ்வொரு சுற்றின் முடிவின்போதும் அதிமுக வேட்பாளர் பெற்ற வித்தியாசம் அதிகரித்தது. 19-ஆவது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் 2 லட்சத்து 91 ஆயிரத்து 343 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமாரைத் தோற்கடித்தார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மொத்த வாக்குகள்: 12,90,652
பதிவானவை: 6,00,151
தபால் வாக்குகள்: 302
ப.ராஜ்குமார் (அதிமுக): 4,20,104
ஆர்.நந்தகுமார் (பாஜக): 1,28,761
சி.பத்மநாபன் (சிபிஎம்): 31,965
மேயர் பதவிக்குப் போட்டியிட்ட சி.பி.எம். வேட்பாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.