சுடச்சுட

    

    கோவை மேயரின் கார் மோதியதில் படுகாயமடைந்த பனியன் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

    கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஏ.பி.நாகராஜன், கடந்த 27ஆம் தேதி பல்லடம் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போதைய கோவை மாநகர மேயர் செ.ம.வேலுசாமியும் அவருடன் சென்றிருந்தார்.

    நன்றி தெரிவித்த பிறகு காரில் கோவை நோக்கி வந்துகொண்டிருந்தார் மேயர். அப்போது, அவ்வழியாக பல்லடம் செந்தூரன் காலனியை சேர்ந்த பனியன் தொழிலாளி சந்திரசேகர் (31), திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். மேயரின் கார் மோதியதில் சந்திரசேகர் படுகாயமடைந்தார். விபத்து ஏற்பட்டும் மேயரின் கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

    தலையில் பலத்த காயமடைந்த சந்திரசேகருக்கு, பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையில், செ.ம.வேலுசாமியின் மேயர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

    சந்திரசேகருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலும் அறுவை சிகிச்சை செய்வதை மருத்துவர்கள் கைவிட்டனர். இருப்பினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சந்திரசேகர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

    அவருக்கு தேவி (25) என்ற மனைவியும், சாதனா (3) என்ற குழந்தையும் உள்ளனர். சந்திரசேகரின் மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai