Enable Javscript for better performance
கோவை மேயர் காரில் அடிபட்டதால் உயிரிழந்த  பனியன் தொழிலாளியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மேயர் காரில் அடிபட்டதால் உயிரிழந்த  பனியன் தொழிலாளியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

    By  கோவை,  |   Published on : 02nd June 2014 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மேயர் காரில் அடிபட்டதால் உயிரிழந்த பனியன் தொழிலாளியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால், கோவை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
     ÷கடந்த மே 27-ம் தேதி பல்லடம் பகுதிக்கு அப்போதைய கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி சென்றிருந்தார். பின்னர் திருப்பூர்- பல்லடம் சாலையில் கோவைக்கு தனது காரில் அவர் திரும்பிக் கொண்டிருந்தார்.
     ÷அப்போது அவ்வழியாக பல்லடம், செந்தூரன் காலனியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி சந்திரசேகர் (31) திருப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதில் எதிரே வந்த மேயரின் காரில் அடிபட்டு சந்திரசேகர் படுகாயமடைந்தார்.
     ÷விபத்து நடந்தவுடன் மேயரின் கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதுகுறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போதுதான், சந்திரசேகர் மீது மோதியது கோவை மேயரின் கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு, மேயரின் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
     ÷இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரசேகர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
     ÷இதனிடையே, செ.ம.வேலுசாமியின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியும் மேயர் பதவியும் அதிமுக தலைமையால் பறிக்கப்பட்டன.
     ÷இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
     ÷ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிவடைந்து, சந்திரசேகரின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, உயிரிழந்த சந்திரசேகரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கும் வரை சடலத்தைப் பெற மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ÷இதையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேசி சமரசம் செய்ததை அடுத்து, இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
     ÷பின்னர், உயிரிழந்த சந்திரசேகரின் உடல் அவரது சொந்த ஊரான கொடைக்கானலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. இறந்த சந்திரசேருக்கு தேவி (25) என்ற மனைவியும், சாதனா (3) என்ற குழந்தையும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai