42 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
By dn | Published on : 02nd June 2014 02:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் ஹவில்தார் ஜி.மோகன்குமார் (41) உடல், 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க கோவையில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த ஜி.மோகன்குமாரின் உடல், விமானம் மூலமாக ஞாயிற்றுக்கிழமை கோவை கொண்டு வரப்பட்டது.
காலை முதல் மாலை வரை அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. பிறகு மாலை 4.35 மணியளவில் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மயானத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
மயானத்துக்குள் ராணுவ மரியாதையுடன் உடல் தூக்கிச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள், விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது ராணுவ முறைப்படி 14 ராணுவ வீரர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து அவரது குடும்ப முறைப்படியிலான சடங்குகள் முடிக்கப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்து அமைப்பினர், பொதுமக்கள்: ராணுவ வீரரின் உடலுக்கு மயானத்தில் திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்து முன்னணி, சிவசக்தி சேவா சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் உள்பட அனைவரும் மத பாகுபாடு பார்க்காமல் அஞ்சலி செலுத்தினர்.
அவரது சகோதரர் நந்தகுமார் கூறுகையில், எனது சகோதரரின் வீரமரணம் எங்களது குடும்பத்துக்கு இழப்பு என்றாலும், இந்திய நாட்டுக்காக அவர் உயிர் இழந்ததை பெருமையாகவே கருதுகிறோம் என்
றார்.