சுடச்சுட

  

  ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

   கோவை காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரவேல் (34). இவருக்குச் சொந்தமான சொத்து வரி ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்யக் கோரி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் கடந்த ஏப்ரலில் விண்ணப்பித்துள்ளார்.

   ஆனால், சொத்து வரி ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் சாயிபாபா காலனி, அழகேசன் சாலையைச் சேர்ந்த அதிகாரி வசந்தகுமாரி, ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

   ரூ.15 ஆயிரம் வழங்க முத்துக்குமாரவேல் மறுத்துள்ளார். இந் நிலையில், ரூ.7 ஆயிரம் கொடுத்தால்தான் பெயர் மாற்றம் செய்யப்படும் என வசந்தகுமாரி தெரிவித்துள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துக்குமாரவேல், லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முத்துக்குமாரவேலிடம் கொடுத்தனுப்பினர். மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை அப் பணத்தை முத்துக்குமாரவேல் வசந்தகுமாரியிடம் கொடுத்துள்ளார்.

   அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் வசந்தகுமாரியைக் கைது செய்தனர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai