சுடச்சுட

  

  சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ஹைதர் அலியை கோவை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

   1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

   இந்தச் சம்பவம் தொடர்பாக ஹைதர் அலி என்ற இன்ஜீனியர் ஹைதர் அலி (45) உள்ளிட்ட 12 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ஹைதர் அலி தலைமறைவானார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் 1993-ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

   இதில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாகவும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஹைதர் அலி உள்ளிட்டோரைத் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து கோவை உள்ளிட்ட சில இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், இந்து அமைப்பைச் சேர்ந்த சில தலைவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹைதர் அலி, பாட்ஷா உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

   இந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஹைதர் அலி பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 21 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஹைதர் அலியை பாலக்காட்டில் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

   கோவை பெரிய கடைவீதி போலீஸார் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹைதர் அலியை, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்தியச் சிறையில் அடைத்தனர். ஹைதர் அலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

   அதேபோல, தலைமறைவாக உள்ள அபு பக்கர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் ஹைதர் அலியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். பிடிபட்ட ஹைதர் அலி, சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 8 ஆண்டுகள் வசித்து வந்ததாகவும், அதன் பின் கேரளம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai