சுடச்சுட

    

    குறிச்சி, சிறுமுகை, சோமனூரில் கைத்தறி அமைச்சர் ஆய்வு

    By கோவை,  |   Published on : 05th June 2014 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டம் குறிச்சி, சிறுமுகை, சோமனூர் பகுதிகளில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அத் துறை அமைச்சர் கோகுல இந்திரா ஆய்வு செய்தார்.

    குறிச்சி சீருடை உற்பத்தி மையம், சிறுமுகை சீருடை உற்பத்தி மையம் மற்றும் பட்டு நெசவாளர்களின் கூட்டுறவுச் சங்கம் மற்றும் சோமனூர் சேரன் விசைத்தறி கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    குறிச்சி சீருடை உற்பத்தி செய்யும் மையத்தில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய தானியங்கி விசைத்தறிக் கூடம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பார்வையிட்டார். அப்போது, புதியதாக துவங்கப்படவுள்ள தானியங்கி விசைத்தறி இயந்திரத்திற்கேற்ப கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென அமைச்சர் கோகுல இந்திரா, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், தமிழ்நாடு பஞ்சாலைக் கழக சீருடை உற்பத்தி மையத்தையும் பார்வையிட்டார். பின்னர், சிறுமுகை ஆலாங்கொம்பு தேவாங்க பட்டு மற்றும் பருத்தி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சென்று நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் விருதுகளைப் பெற்ற புடவைகளையும், இதர ரகங்களையும் பார்வையிட்டார். அங்கிருந்த நெசவாளர் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது, முதல்வர் ஜெயலலிதா, நெசவாளர்களின் நலன் காக்க முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கென பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் என பல்வேறு வகையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

    இத்திட்டங்களைப் பெற்று நெசவாளர்கள் அதிகளவில் பயன் பெற வேண்டும். மேலும், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நெசவாளர்கள் அனைவரும் விண்ணப்பம் செய்து பயனடைய வேண்டும்.

    நெசவாளர்களிடம் பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அதைத்தொடர்ந்து, சோமனூர் சேரன் விசைத்தறி கூட்டுறவுச் சங்கத்திற்கு சென்று, உற்பத்தி செய்யப்பட்டுள்ள விலையில்லா சேலை மற்றும் சீருடைகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ், மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் துறை மற்றும் ஜவுளித்துறை அரசு செயலர் ஹர்மந்தர் சிங், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் பிரகாஷ், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் சகாயம், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத் தலைவர் விருகை ரவி, தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத் தலைவர் கே.வி.மனோகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.முருகன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai