சுடச்சுட

  

  நெரிசலைக் குறைக்க பார்க்கிங் கட்டணம் -ஆர்.வேல்முருகன்

  By கோவை  |   Published on : 05th June 2014 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக முக்கியச் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து தொழில்நுட்பம் மூலமாக மாநகராட்சி கணக்குக்குப் பணம் எடுத்துக் கொள்ளும் முறையை விரைவில் அமல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

  தமிழகத்திலேயே இத்திட்டம் முதன்முதலாக கோவை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகப் பெரிய மாநகராட்சி கோவை. இங்கு ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, பெரிய கடைவீதி, ஆர்.எஸ்.புரம், டி.பி. சாலை, காந்திபுரம், கிராஸ்கட் சாலை, பூ மார்க்கெட் பகுதிகளில் எப்போதும் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும். இப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளன.

  கோவையில், சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாநகராட்சியோ அல்லது பிற அமைப்புகளுமோ கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால், பொருள்கள் வாங்குவதற்கு நகருக்குள் வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களைக் கடைகளுக்கு முன் நிறுத்திச் சென்று விடுகின்றனர். ஒருநாள் முழுவதும் நிறுத்தியிருந்தாலும் அதற்குக் கட்டணம் இல்லை. மேலும், பல்வேறு பெரிய கடைகளில் வாகன நிறுத்துமிடங்கள் தனியாக அமைக்கப்படவில்லை. கடைக்கு வேலைக்கு வருபவர்களும் வாகனங்களைக் கடைகளுக்கு முன் நிறுத்திக் கொள்கின்றனர்.

  இப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சி நிர்வாகம், முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பார்க்கிங் கட்டணத்தை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வசூலிக்கத் தீர்மானித்துள்ளது. ஒரு வீதியில் வாகனத்தை நிறுத்தும்போது மாநகராட்சி தெரிவிக்கும் எண்ணுக்கு, வாகனத்தை நிறுத்துபவர் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அவர் மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்லும்போது அதே எண்ணுக்கு மீண்டும் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். வாகனத்தை எவ்வளவு நேரம் நிறுத்தியுள்ளாரோ அதற்கேற்ப கட்டணம் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து மாநகராட்சிக் கணக்குக்கு மாற்றப்படும்.

  புதிதாகக் கோவைக்கு வரும் ஒருவர், அந்தந்தப் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் விற்கப்படும் ப்ரீபெய்டு கார்டை வாங்கிப் பயன்படுத்தலாம். வாகனம் நிறுத்துவதைக் கண்காணிப்பதற்காக டெண்டர் எடுத்தவர், வாகனம் நிறுத்துவதற்குப் பணம் வாங்கக் கூடாது. குறிப்பிட்ட வாகனம் அந்த இடத்தில் நின்றுள்ளதா என்பதை மட்டும் குறித்துக் கொண்டால் போதும். டெண்டர் எடுத்தவருக்கு மாநகராட்சி மாதம்தோறும் ஒரு தொகையைத் தரும். இதன் மூலமாக முறைகேடுகளும் தடுக்கப்படும்.

  இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் க.லதா, "தினமணி' நிருபரிடம் புதன்கிழமை கூறியது: கோவை சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கு இப்போது கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் முதன்முதலாக தொழில்நுட்பம் மூலமாக வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் கோரப்படும். இதன் மூலமாக எவ்வளவு நேரம் வாகனம் நிறுத்தப்படுகிறதோ அதற்கேற்பக் கட்டணம், சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து மாநகராட்சி கணக்குக்கு மாற்றப்படும். டெண்டர் எடுத்தவருக்கு சேவைக் கட்டணம் தரப்படும். எங்கெங்கு இத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai