சுடச்சுட

  

  கோவை மாவட்ட ஆட்சியரின் கார் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் காயமடைந்தார். கார் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டுப் பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். தண்ணீர் திறந்துவிடுவதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் ஜெயராமன், எம்.எல்.ஏ. முத்துக்கருப்பண்ணசாமி, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் பொள்ளாச்சி வழியாக ஆழியாறுக்கு வியாழக்கிழமை சென்றனர்.

  இதில், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் சென்ற கார், காலை 10.30 மணிக்கு பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள கோட்டூர் சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை ஆட்சியரின் கார் முந்த முயன்றாகத் தெரிகிறது. அப்போது, கார் டயர் வெடித்ததால், எதிரே வந்த பைக் மீது கார் மோதியது. இதில், பைக்கை ஓட்டி வந்த அஸ்வின் (22) என்பவர் தூக்கிவீசப்பட்டார். இதில், அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

  இதையடுத்து, விபத்தில் காயமடைந்த இளைஞரை ஆட்சியருடன் வந்தவர்கள் மற்றும் பொது மக்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் காரின் வலது புற முன்பகுதி சேதமடைந்தது.

  பொள்ளாச்சி கிழக்குப் போலீஸார் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநர் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் டயர் மாற்றப்பட்டு கார் எடுத்துச் செல்லப்பட்டது. ஆழியாறு சென்றுவிட்டுத் திரும்பிய ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்வினைப் பார்த்து நலம் விசாரித்தார். மேலும், பைக்கை சரி செய்யத் தேவையான தொகையையும் தருவதாக அவர் கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai