சுடச்சுட

    

    குறுந்தொழில் முனைவோருக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக ஆய்வு மட்டும் நடத்துமாறு வணிக வரித்துறை ஆணையருக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக, வணிக வரித்துறை ஆணையருக்கு "டேக்ட்' தலைவர் ஜே.ஜேம்ஸ் புதன்கிழமை எழுதிய கடித விவரம்:

    தொழில் நகரான கோவையில் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர் பொறியியல் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் குறுந்தொழில் முனைவோர் ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். ஆனால், வணிக வரித்துறை அலுவலர்கள் கடந்த இரு நாள்களாக குறுந்தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நெருக்கடியில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களில் தினமும் உற்பத்திப் பொருள் பதிவு புத்தகத்தில் எழுதி வைக்கவில்லை என்று கூறி சராசரியாகப் பல நிறுவனங்களுக்கு ரூ.2,000 வீதம் அபராதம் விதித்துள்ளனர். இது குறுந்தொழில் முனைவோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குறுந்தொழில் முனைவோர் தங்கள் நிறுவனங்களில் சிறு வாகனங்கள், கனரக வாகனங்களின் உதிரி பாகங்களையும், மோட்டார், பம்ப்செட், கம்ப்ரஷர்களின் உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர்.

    உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப் பொருள்களை உரிய பில்லோடு வாங்குகின்றனர். ஆர்டர் தரும் நிறுவனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைச் செய்து தருகின்றனர்.

    மூலப் பொருள் வாங்குவதற்கும், உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதற்கும் மூலப் பொருள் இருப்பு தொடர்பாகவும் மாதம்தோறும் வணிக வரித்துறைக்கு வரி செலுத்தி வருகின்றனர். இந் நிலையில், வணிக வரித்துறை அதிகாரிகள் குறுந்தொழில் கூடங்களுக்கு வந்து தினமும் உற்பத்தியாகும் பொருள்களை பதிவு புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

    குறுந்தொழில் கூடங்களில் இந்த நடைமுறையைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம். குறுந்தொழில் முனைவோர் கொள்முதல், விற்பனை மற்றும் இருப்பு விவரங்களை மாதம்தோறும் வணிக வரித்துறைக்குத் தெரிவிக்கின்றனர்.

    கொள்முதல், விற்பனை மற்றும் இருப்பு விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். அபராதம் விதிப்பதைத் தவிர்க்க வணிக வரித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai