Enable Javscript for better performance
ஹைதர் அலி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    அல்-உம்மா தீவிரவாதி ஹைதர் அலி சார்பில் ஜாமீன் கோரி கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதேநேரத்தில் மற்றொரு வழக்கில் அவரை ஆஜர்படுத்தக் கோரி கோவை நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கோவை, வின்சென்ட் சாலையைச் சேர்ந்தவர் அல்-உம்மா தீவிரவாதி ஹைதர் அலி (45). கடந்த செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் கோவை சிபிசிஐடி போலீஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

    இவர், 1989-ஆம் ஆண்டு கோவையில் இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் என்பவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்து பிறகு தலைமறைவானார்.

    தற்போது அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்து அமைப்பு நிர்வாகிகளைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில் மட்டும் ஹைதர் அலி கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இந்து அமைப்பு நிர்வாகிகளைத் தாக்கியது உள்பட இரு வழக்குகளில் தேடப்பட்டு வருபவராக உள்ளார்.

    இவ் வழக்குகளில் துப்புத் துலக்க வேண்டி சிபிசிஐடி போலீஸார் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சிபிசிஐடி சார்பில் கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், ஹைதர் அலி விவகாரம் குறித்த தகவல்களைத் திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளதால், வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்படவில்லை.

    இந் நிலையில், ஹைதர் அலியை 10 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி சார்பில் வெள்ளிக்கிழமை மனு

    தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் நீதிமன்றம் அவரை மூன்றுமுதல் ஏழு நாள்கள் வரை காவலில் விசாரிக்க அனுமதியளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஜாமீன் மனு தாக்கல்: ஹைதர் அலி சார்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து ஜாமீன் கோரி கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    பிடிவாரண்ட்: இதுதவிர, இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கு, முன்னர் பெரிய கடை வீதி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஹைதர் அலி நீண்ட நாள்களாக ஆஜராகாத சூழல் உள்ளது. இந் நிலையில், அவரை வரும் 9-ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பிடிவாரண்ட் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai