Enable Javscript for better performance
எம்.எட். படிப்பு நடத்த அனுமதி பெற போ− பிரமாணப் பத்திரம் தாக்கல்? -ஆர்.ஆதித்தன்-- Dinamani

சுடச்சுட

    

    எம்.எட். படிப்பு நடத்த அனுமதி பெற போ− பிரமாணப் பத்திரம் தாக்கல்? -ஆர்.ஆதித்தன்-

    By கோவை  |   Published on : 07th June 2014 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கூடத்தின் சார்பாக எம்.எட். படிப்பு தொடங்குவதற்காக தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலுக்கு (என்.சி.டி.இ.), பல்கலைக்கழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரம் போலியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கூட கல்வியியல் துறையில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் முழு நேரப் பேராசிரியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள செயலால் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.

    பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கூடத்தின் சார்பாக ஏற்கெனவே பி.எட். படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்கள் சேர்ந்து பி.எட். படித்து வருகின்றனர்.

    குறிப்பாக, ஆசிரியர் கல்வி தொடர்பான படிப்புகளை நடத்த தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலில் (என்.சி.டி.இ.) அனுமதி பெற வேண்டியது கட்டாயம். இந்தப் படிப்பினை நடத்துவதற்குத் தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை, போதுமான வசதிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். அந்த வகையில் ஆசிரியர்கள் நியமனம் என்பது தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்.

    தற்போது, பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கூடம் சார்பில் எம்.எட். படிப்பினை அஞ்சல் வழியில் (தொலைதூரக் கல்வி) நடத்த விண்ணப்பித்துள்ளது. பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் மண்டல இயக்குநருக்கு 2014 பிப்ரவரி 26-ஆம் தேதி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. எம்.எட். படிப்பு நடத்த அங்கீகாரமும் கிடைத்துவிட்டது.

    இதில், எஸ்.சுதர்சன் என்பவர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தின் கல்வியியல் துறையில் முழு நேரப் பேராசிரியராக 2014 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பணிபுரிந்து வருவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (இவர் ஏற்கெனவே அரசு உதவி பெறும் தனியார் கல்வியியல் கல்லூரியில் புகார் ஒன்றில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்டவர் எனக் கூறப்படுகிறது).

    எம்.எட். படிப்புக்கு அங்கீகாரம் கோரி தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் மண்டல இயக்குநருக்கு விண்ணப்பித்த அதேநாளில், பல்கலைக்கழக கல்வியியல் துறையில் முழு நேரப் பேராசிரியராகப் பணிபுரிவதாக எஸ்.சுதர்சன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதேநேரத்தில், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி பல்கலைக்கழக முழுநேர பேராசிரியராக எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் என்றும், விளம்பரம் செய்யாமல் எப்போது தேர்வு செய்யப்பட்டார் எனவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

    பல்கலைக்கழக மானியக் குழு விதியின்படி முழு நேரப் பேராசிரியரை நியமிப்பது என்பது அத்துறையில் உள்ள காலியிடத்தைப் பொறுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அந்தப் பணியிடத்தை நிரப்ப வேண்டும். இதற்கு நிதித் துறை சார்ந்த ஒப்புதல், சிண்டிகேட் ஒப்புதல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன.

    தொலைதூரக் கல்விக்கூட கல்வியியல் துறையில் பேராசிரியர் மற்றும் தலைவர் பொறுப்புக்கு யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கே தெரியாமல், விளம்பரமும் செய்யப்படாமல் பேராசிரியரை நியமிப்பது முறையற்ற செயல் என்றார்.

    அதேநேரத்தில் ஆசிரியர் தகுதி, அனுபவங்களை முன்னுரிமையாக கொண்டு என்.சி.டி.இ. விதிமுறைகளின் கீழ் ஒருவரை நியமிக்கலாம். எம்.எட். படிப்புக்கு அடையாளம் காணப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலுக்கு பல்கலைக்கழகம் தெரிவிக்கலாம்.

    ஆனால், ஆசிரியர் நியமனத்தில் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.பிச்சாண்டி கூறியது:

    பல்கலைக்கழகத்தில் முழு நேரப் பேராசிரியரை நியமனம் செய்யப் பொதுவாக விளம்பரம் செய்யப்பட வேண்டும். அதேபோல, பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின்படி தேர்வுக் குழு மூலமாக நேர்காணல் நடத்தி பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    இதுபோல அல்லாமல் பேராசிரியர் நியமனம் செய்யப்பட்டிருந்தால் அது தவறான முன்னுதாரணம். இதில் முறைகேடு நடந்திருப்பது ஊர்ஜிதமானால் பல்கலைக்கழக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக ஆசிரியர் மற்றும் அலுவலர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ் விஷயத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai