சுடச்சுட

  

  கவனிப்பாரற்ற ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய்

  By பொள்ளாச்சி  |   Published on : 08th June 2014 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆழியாறு அணையின் பழமையான பாசனத் திட்டமான பழைய ஆயக்கட்டு பாசனக் கால்வாய்கள் தூர் வாரப்படாததாலும், புதுப்பிக்கப்படாததாலும் தண்ணீர் அதிக அளவில் விரயமாகி வருகிறது.

  கோவை மாவட்டத்தில் ஆழியாறு அணை மூலமாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழைய ஆயக்கட்டுப் பாசனத்தில், பள்ளி விளங்கால் கால்வாய் மூலமாக 656 ஏக்கரும், அரியாபுரம் கால்வாய் மூலமாக 1,246 ஏக்கரும், காரப்பட்டி கால்வாய் மூலமாக 782 ஏக்கரும், பெரியணை கால்வாய் மூலமாக 1,920 ஏக்கரும், வடக்கலூர் கால்வாய் மூலமாக 1,796 ஏக்கரும் என 6,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

  ஆழியாறு அணை கட்டுவதற்கு முன்பிருந்தே பழைய ஆயக்கட்டுப் பாசனம் நடைமுறையில் இருந்துவருகிறது. இப்பாசனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் 6,400 ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட்டுவந்தது.

  விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, காலம் கடந்து தண்ணீர் விடுதல், கால்வாய் தூர் வாரப்படாதது போன்ற காரணங்களால் தற்போது 2,500 ஏக்கரில் மட்டுமே நெல் பயிரிடப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு மே மாதத்திலும், சம்பா சாகுபடிக்கு அக்டோபர் மாத்திலும் இக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

  கால்வாய்கள் சேதம்: பழைய ஆயக்கட்டுப் பாசனத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்துமே பெயருக்குத் தகுந்தாற்போல் பழையதாகவே புதுப்பிக்கப்படாமல் உள்ளன. பல ஆண்டுகளாக கால்வாய்க் கரைகள் சேதமடைந்தும், போதிய பராமரிப்பின்றியும் உள்ளன.

  எனவே, கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்படும் காலங்களில் விவசாயிகள் தங்கள் சொந்தச் செலவில் கால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்றுகின்றனர். பொதுப்பணித் துறை சார்பில் முறையான பராமரிப்பு செய்யப்படுவதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

  இது மண் கால்வாயாக உள்ளதால், சேறு நிறைந்து காணப்படுதல், கால்வாய் கரைகளில் சிறிய உடைப்புகள், ஷட்டர் பழுது போன்ற காரணங்களால் 20 முதல் 25 சதவீதம் தண்ணீர் விரயமாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

  புதுப்பிக்க வேண்டும்: மண் கால்வாயான இதில் தண்ணீர்க் கசிவு அதிக அளவில் ஏற்படுவதால், அருகிலுள்ள நிலங்களில் உள்ள தென்னை மற்றும் பிற விவசாயப் பயிர்கள் பாதிப்படைகின்றன. எனவே, தண்ணீர் விரயத்தைத் தடுக்க கால்வாய்க்கு கான்கிரீட் கரைகள் அமைத்து கால்வாயைப் புதுப்பிக்க வேண்டும்.

  தற்போது, ஷட்டர் பழுதால் தண்ணீரை அடைக்க முடியாமல் தேவைக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. ஆண்டுதோறும், விவசாயிகள் இதை சரிசெய்யக் கோரியும், தண்ணீர் வீணாவது தொடர்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

  பழுதான ஷட்டர்களைச் சரிசெய்தால், விவசாயிகள் தேவையான காலங்களில், தேவையான தண்ணீரை மட்டும் திறந்துவிட்டுப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். இக்குறைகள் சரிசெய்யப்பட்டால் தற்போது வழங்கும் தண்ணீரை விடக் குறைவாக வழங்கி, அணையில் நீரை இருப்பு வைத்து தேவையானபோது திறந்துவிட்டு பயன்படுத்தலாம்.

  இதுகுறித்து, பழைய ஆயக்கட்டுப் பாசனத்தில் உள்ள வடக்கலூர் கால்வாய் பாசன சபைத் தலைவர் ராஜமணி, காரப்பட்டி கால்வாய் பாசன சபைத் தலைவர் வாசு ஆகியோர் கூறியது:

  கால்வாய்க் கரைகளை கான்கிரீட் கரைகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது மதகுகளையேனும் சரிசெய்து, 100 நாள் வேலைத் திட்டம் மூலமாக கால்வாய்களைத் துôர்வார வேண்டும் என்றனர்.

  கடந்த 5-ஆம் தேதி ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  இந்த முறை தண்ணீர் நிறுத்தியவுடன், கால்வாயைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பழைய ஆயக்கட்டுப் பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai