சுடச்சுட

    

    கல்வி மூலமாக தொழில் முனைவோரை உருவாக்குவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) துணைத் தலைவர் எச்.தேவராஜ் தெரிவித்தார்.

    கோவை, சரவணம்பட்டி, பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பிபிஜி வணிகவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    இதில், தமிழக தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையர் குமார் ஜெயந்த் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார்.

    பிபிஜி கல்விக் குழுமங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு வரவேற்றார். பிபிஜி கல்விக் குழுமங்கள் மற்றும் அஸ்வின் மருத்துவமனை தலைவருமான டாக்டர் எல்.பி.தங்கவேலு முன்னிலை வகித்தார். பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.பிரகாசம் ஆண்டறிக்கை வாசித்தார்.

    புதுதில்லி, பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் மாணவ மாணவியருக்கு பட்டமளிப்பு விழா உரையாற்றியதாவது:

    போட்டிகள் நிறைந்த இந்த உலகில், திறமையே வெற்றிக்கு அடிப்படை. சர்வதேச போட்டிச் சூழலில், மாணவர்கள் நவீன அறிவோடு, தங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பணி வாய்ப்புகளுக்காக, சிறப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். பணியில் அமர்ந்தாலும் தொடர்ந்து திறன்களைப் பெருக்கிக் கொண்டே இருக்கவேண்டும். தொடர் கற்றல் அவசியமாகும்.

    மேற்படிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அடிப்படையாகச் செயல்படக் கூடியது. புதியன கண்டுபிடித்தல், புதிய தொழில்நுட்பம் ஆகியவை உற்பத்தியைக் கூட்டி வளமாக்கும்.

    உயர்கல்வி மேம்பாட்டில் ஆசிரியர் கட்டமைப்பு, மேலாண்மைத் திறன்கள் குறைவாக இருப்பதை சரிசெய்தாக வேண்டும். அறிவியல் ஆராய்ச்சித் துறைகளிலும் முழு ஈடுபாடு வேண்டியுள்ளது. கல்வி நிலையங்களில் பலதரப்பட்ட கல்வியாளர்களின் கூட்டு நடவடிக்கைகள், தொழில்துறை வல்லுநர்களின் கல்விசார் பங்களிப்பு, கல்வி நிலையங்களுடனான தொடர் உறவு ஆகியவற்றால் மட்டுமே, சர்வதேசக் கல்வித் தரத்தை எட்டமுடியும்.

    கல்வி மூலமாக தொழில் முனைவோரை உருவாக்குவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். தொழில் முனைவு சார்ந்தே பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். இதன்மூலமாக பொருளாதாரம் மேம்படும்.

    பிராந்திய ரீதியில் தொழில்நுட்பக் கல்வி வாய்ப்புகள் சமநிலையில் இல்லை. இந்தியத் தொழில்நுட்பம் புகுத்தப்படக்கூடிய வகையில் தொழிற்கல்வி மேம்படவேண்டும்.

    அரசாங்கம், தொழில்துறை, கல்வி நிலையம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து ஆராய்ச்சிகளில் தீவிர கவனம் செலுத்தி, சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்பக் கல்விக்கு வழியமைக்க வேண்டும் என்றார். இவ்விழாவில், 200 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai