சுடச்சுட

    

    குன்னூர் வெடிவிபத்தில் கை துண்டான தொழிலாளியின் வலது கை மணிக்கட்டின் மேல்பகுதியை இடது கையுடன் பொருத்தி கங்கா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அருவங்காட்டில் மத்திய அரசின் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஜூன் 2-ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாத்ரு யாதவ் (41) என்பவரது இரு கைகளின் மணிக்கட்டுப் பகுதிக்குக் கீழே துண்டாயின.

    இதையடுத்து துண்டான கைகளுடன் மாத்ரு யாதவ், கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்தபோது இடது கை மணிக்கட்டின் கீழ்பகுதி மீண்டும் இணைக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து இருந்தது. அதேபோல வலது கையின் மணிக்கட்டுக்கு மேல்பகுதி அகற்ற வேண்டிய நிலையில் இருந்தது. இதையடுத்து, மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மற்றும் கை, நுண்ணறிவு சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் எஸ்.ராஜசபாபதி தலைமையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் வலது மணிக்கட்டுக்கு மேல் பகுதியை (கை விரல்கள் அடங்கிய பகுதி) இடது கையுடன் இணைக்க முடிவு செய்தனர். அதன்படி 8 மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சை மூலம் வலது கை மணிக்கட்டு இடது கையுடன் இணைக்கப்பட்டது.

    இதுகுறித்து டாக்டர் ராஜசபாபதி கூறியதாவது:

    அருவங்காடு மருத்துவமனையில் தொழிலாளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன் துண்டான பகுதிகள் பாதுகாப்பான முறையில் கொண்டு வரப்பட்டன. வலது கையின் மணிக்கட்டு மேல் பகுதியை இடது கையுடன் இணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.

    வலது கையின் கட்டைவிரல் பகுதி இடது கையின் கட்டைவிரல் பகுதிக்கு எதிர்த்திசையில் அமைந்திருக்கும். அப்போது கட்டை விரலுக்கான நுண்ணிய நரம்புகளை கவனமாக இணைக்க வேண்டும். எனவே 3 மைக்ரோ அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குழு மூலம் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட நபருக்கு 6 மாதம் முதல் 9 மாதங்கள் வரையில் பிசியோதெரபி பயிற்சி அளிப்பதன் மூலம் அவர் குணமடைந்து விடுவார் என்று

    தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai