சுடச்சுட

    

    கடும் சிரமத்தில் ஜவுளித் தொழில் உரிமையாளர்கள்- ஆர்.வேல்முருகன் -

    By கோவை  |   Published on : 10th June 2014 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழில் நுட்ப மேம்பாட்டு நிதியைப் பெற்ற ஜவுளித் தொழில் உரிமையாளர்கள், அதற்கான வட்டிச் சலுகையாக சுமார் ரூ.5000 கோடியை மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளாகத் திருப்பித் தராததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பைத் தருவது ஜவுளித் தொழில்தான். தேசிய அளவில் 1,759 பெரிய நூற்பாலைகளும், 1,326 சிறிய நூற்பாலைகளும் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 917 பெரிய நூற்பாலைகளும், 1,031 சிறிய நூற்பாலைகளும் உள்ளன.

    உலக அளவில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாகவும், இந்தியாவுக்குள் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததாலும் இந்தியப் பொருள்களின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதனால் ஜவுளித் தொழிலில் உள்ள இயந்திரங்களை உலக அளவில் போட்டியிட வசதியாக அதிநவீனத் தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குக் கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்பட்டது.

    இந்த நிலையில், ஜவுளித் தொழிலில் ஈடுபட்ட உரிமையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டது. வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று வங்கிக்கு வட்டியுடன் திரும்பச் செலுத்துபவர்களுக்கு வட்டிச் சலுகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் 1999-ஆம் ஆண்டு முதல் 2006 வரை வட்டிச் சலுகை வழங்கப்பட்டது. அதன்பின், 2007-இல் 10 மாதங்களுக்கு இச்சலுகை வழங்கப்படவில்லை. அப்போது வட்டிச் சலுகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வட்டிச் சலுகை கிடைக்கும் என நம்பி, பல நூற்றுக்கணக்கான உரிமையாளர்கள் வங்கியில் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்திவிட்டனர். ஆனால் இன்று வரை வட்டிச் சலுகைக்கான தொகை திரும்ப வழங்கப்படவில்லை.

    சாதாரணமாக முடிய வேண்டிய இந்தப் பிரச்னை, வங்கியாளர்களின் குழப்பங்களினாலும், ஜவுளி அமைச்சகத்தின் தேவையில்லாத குளறுபடிகளாலும் தீர்க்க முடியாதபடி சிக்கலாகியுள்ளது. இதனால் சுமார் ரூ.5,000 கோடிக்கும் மேலான தொகை ஜவுளித் தொழில் உரிமையாளர்களுக்கு வந்து சேர வேண்டியுள்ளது.

    இதுதொடர்பாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் டி.ராஜ்குமார், தினமணி நிருபரிடம் திங்கள்கிழமை கூறியது: இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், ஜவுளித்துறை அமைச்சருக்கும் உடனடியாக வட்டிச் சலுகையைத் திரும்ப வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை வங்கியிடமிருந்து கடிதம் பெற்று ஜவுளித்துறை ஆணையரே வழங்கலாம். இதில் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதித்ததாலும், சில வங்கிகள் செய்த தவறுகளினாலும்தான் ஜவுளித்துறை உரிமையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விரைவில் இப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai