சுடச்சுட

  

  கோவையில் முதல் முறையாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை

  By கோவை,  |   Published on : 10th June 2014 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் முதல் முறையாக இளைஞருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு கே.எம்.சி.எச். மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

  இதுகுறித்து மருத்துவமனை தலைவர் நல்லா ஜி.பழனிசாமி நிருபர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொன்ராஜ் (24). இவர் இதய வீக்க பிரச்னையால் மூச்சுத் திணறல், சோர்வு, தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி வந்தார்.

  இந் நிலையில், கடந்த 6 மாதத்துக்கு மேலாக கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது தந்தை, சகோதரர் ஆகியோரும் இதய வீக்க பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள். இதுபோன்ற பிரச்னையை ஒரே குடும்பத்தினர் சந்திக்கும் மரபணு பிரச்னை காரணமாக இருக்கலாம்.

  பொதுவாக சிறிய வயதில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவது, இதய பலவீனம், மாரடைப்பு, இதய வால்வுகளில் அடைப்பு உள்ளிட்ட பிரச்னை காரணமாக இதய வீக்க பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம்.

  இதய வீக்கத்தால் பாதிக்கப்பட்ட பொன்ராஜூக்கு, உடனடியாக இதய மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந் நிலையில், கடந்த 5 நாள்களுக்கு முன் ஒருவரின் இதயம் கிடைத்தது. ஆனால் வேறு குரூப் ரத்தம் என்பதால், அது அவருக்கு பொருத்த முடியாமல் நிலை ஏற்பட்டது.

  இந் நிலையில், கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மூளைச் சாவடைந்தார். அவரது குரூப் ரத்தம் பொன்ராஜூக்கு பொருந்தியது. இதையடுத்து, மூளைச் சாவடைந்த குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவரது இதயம் அறுவைச் சிகிச்சை மூலம் பொன்ராஜூக்கு பொருத்தப்பட்டது.

  பொதுவாக, மூளைச் சாவடைந்தவரின் இதயம் சராசரியாக 4 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த வேண்டும். இந்நிலையில், ஒரே மருத்துவமனை என்பதால், 43 நிமிடத்தில் பொன்ராஜூக்கு மாற்று இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

  மனிதனின் உடல் மாற்று இதயத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளாது. எனவே, வாழ்நாள் முழுவதும் அதற்காக மருந்து உட்கொள்ள வேண்டும். மேலும் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்கள் 85 சதவீதம் பேர் ஒரு வருடமும், 65 முதல் 70 சதவீதம் பேர் 5 ஆண்டுகளும் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  ஆனால் சிறிய வயதுடையவரின் இதயம் பொன்ராஜூக்கு பொருத்தப்பட்டுள்ளதால் அவரது வாழ்நாள் சற்று அதிகரிக்க கூடும். தமிழகத்தில் சென்னையை அடுத்து பிற மாவட்டங்களில் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் முதல் முறையாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளது.இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசாந்த் வைத்தியநாத் தலைமையில் 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர். தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது.

  எனவே இதய மாற்று அறுவைச் சிகிச்சையும் இத் திட்டத்தின் கீழ் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால், பலர் பயனடைவர் எனத் தெரிவித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai