Enable Javscript for better performance
மாவட்ட நிர்வாகம் நிலம் வழங்கினால் மாநகராட்சி பகுதியில் கூடுதலாக 6,200 வீடுகள் கட்ட நடவடிக்கை: குடிசை மாற்று வாரியத் தலைவர்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட நிர்வாகம் நிலம் வழங்கினால் மாநகராட்சி பகுதியில் கூடுதலாக 6,200 வீடுகள் கட்ட நடவடிக்கை: குடிசை மாற்று வாரியத் தலைவர்

    Published on : 11th June 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட நிர்வாகம் நிலம் வழங்கும்பட்சத்தில் கோவையில் கூடுதலாக 6,200 வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து தெரிவித்தார்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து, வாரிய மேலாண் இயக்குநர் பழனிசாமி முன்னிலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:

    குடிசைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடவும், நிரந்தர வீடுகள் அமைத்து கொடுத்திட வேண்டும் என்றும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார்.

    மேலும் தமிழ்நாடு 2023 என்ற தொலைநோக்கு திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட ரூ.65,000 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    தமிழகத்தை குடிசையில்லாத மாநிலமாக மாற்றிட சென்னை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு ரூ.25,000 கோடியும், மற்ற மாநகராட்சிகளில் கட்டுவதற்கு ரூ.25,000 கோடியும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கட்டுவதற்கு ரூ.15,000 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சியில் அதிகப்படியான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கோவை மாவட்ட நிர்வாகம் நிலம் வழங்கும்பட்சத்தில் மேலும் 6,200 வீடுகள் மாநகராட்சி பகுதியில் கட்டித் தர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர் பழனிசாமி பேசியது:

    கோவை மாவட்டத்தில் 34,426 வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. மாவட்டத்தில் 227 பகுதிகளில் குடிசைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இதில் 116 பகுதிகளில் அந்த இடத்திலேயே வீடுகள் கட்டிக் கொள்ள இயலும். 111 இடங்கள் ஆட்சேபகரமான அரசு நிலங்களாக உள்ளதால் மாற்று இடங்களில்தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும்.

    வசிக்கும் இடத்திலேயே 19,155 குடியிருப்புகளும், நீர்நிலை போன்ற இடங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடங்களில் 15,271 வீடுகளும் கட்டித் தரப்படவுள்ளன என்றார்.

    முன்னதாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் மலுமிச்சம்பட்டியில் 1,140 குடியிருப்புகள் ரூ.79.18 கோடி மதிப்பிலும், கோவைப்புதூர் அண்ணா நகரில் 936 குடியிருப்புகள் ரூ.45 கோடி மதிப்பிலும், மலை நகரில் 224 குடியிருப்புகள் ரூ.10.5 கோடி மதிப்பிலும், கீரணத்தம் பகுதியில் 1,280 குடியிருப்புகள் ரூ.62.40 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேலஞ்சர் துரை, வி.சி.ஆறுக்குட்டி, மாநகராட்சி மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, மாநகராட்சி துணை ஆணையர் சிவராசு, வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் இளங்கோ, செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai