சுடச்சுட

  

  கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் இறுதி இருப்புக்குக் கீழ் உள்ள குகை நீர்ப் பாதையை கேரளம் அடைத்துவிட்டதால், இன்னும் 10 நாள்களுக்கு மட்டுமே அணையிலிருந்து குடிநீர் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  கேரளப் பகுதிக்குள் உள்ளது சிறுவாணி அணை. இந்த அணை நீர், உலகின் இரண்டாவது சுவைமிக்க நீöராக கருதப்படுகிறது.

  சிறுவாணியில் இருந்து கோவை குடிநீருக்காக தினமும் 101 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. அணையின் இறுதி இருப்புக்குக் கீழ் உள்ள குகை நீர்ப் பாதை வழியாகத் தனியாக மோட்டார் வைத்து சுமார் 6 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்க முடியும்.

  கடந்த ஆண்டு கோடை காலத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், இறுதி இருப்புக்குக் கீழ் உள்ள தண்ணீர் குகை நீர்ப் பாதை வழியாக மோட்டார் வைத்து உறிஞ்சப்பட்டது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படவில்லை. சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்டம் 15 மீட்டர். தினமும் 101 எம்.எல்.டி. தண்ணீர் எடுத்தால் 10 செ.மீ. நீர் மட்டம் குறையும்.

  செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணை பகுதியில் 16 மி.மீ. மழை பெய்துள்ளது. அணையில் 863.4 மீட்டர் (கடல் மட்டத்தில் இருந்து) வரை தண்ணீர் எடுக்க முடியும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையில் 864.35 மீட்டர் உயரத்துக்குத் தண்ணீர் உள்ளது. எனவே, அணையிலிருந்து இன்னும் 10 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும்.

  இறுதி இருப்புக்குக் கீழ் உள்ள குகை நீர்ப் பாதையை கேரள அரசு அடைத்துவிட்டதால் அங்கிருந்து தண்ணீர் எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  திங்கள்கிழமை சிறுவாணி அணையில் இருந்து 30 எம்.எல்.டி. தண்ணீர் மட்டும் பெறப்பட்டது. ஆனால் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 55 எம்.எல்.டி. தண்ணீர் பெறப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் நீர்மட்டம் உயரும். அப்போது கோவையில் குடிநீர் பிரச்னை ஏற்படும் நிலை இருக்காது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

  கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கு முன்பு சிறுவாணி நீர் வழங்கப்பட்டது. ஆனால், கோடையில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு, அப்போது மேயராக இருந்த செ.ம. வேலுசாமியின் உத்தரவின் பேரில் சிறுவாணி நீர் வழங்கப்பட்ட 22 வார்டுகளில், கடந்த ஆண்டு பில்லூர் குழாயை இணைத்து குடிநீர் வழங்கப்பட்டது. இப்போது 8 வார்டுகளுக்கு மட்டும் சிறுவாணி நீர் வழங்கப்படுகிறது.

  சிறுவாணி நீர் வழங்கும் பகுதிகளுக்கான குழாயுடன் பில்லூர் குடிநீர் குழாயை இணைத்திருக்காவிட்டால் இப்போது மிகுந்த சிரமத்துக்கு மாநகராட்சி உள்ளாகியிருக்கும் என்று மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai